search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா சீர்குலைந்துவிடும்"

    ஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். #PranabMukherjee #RSS
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஸ்தா முகர்ஜியும், தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அவருடைய பேச்சை மறந்து விடுவார்கள். ஆனால் அது தொடர்பான படக்காட்சிகள் நிலைத்து நின்றுவிடும்” என கூறினார்.



    இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொள்வதற்கு முன்பாக அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் பிறந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்றார்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி, “இந்திய தாய்நாட்டின் மாபெரும் மகனுக்கு எனது மதிப்பையும், அஞ்சலியையும் செலுத்துவதற்கு இங்கு இன்று வந்து உள்ளேன்” என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார்.

    பின்னர் பிரணாப் முகர்ஜி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது பாரத தேசத்தை பற்றி நான் புரிந்து கொண்ட விஷயங்கள், தேசியவாதம், தேசபக்தி ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

    பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.

    மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

    இந்தியாவை ஒரு மொழியாலோ, ஒரு மதத்தாலோ அடையாளப்படுத்திவிட முடியாது. 130 கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில் 122 மொழிகள் பேசப்படுகின்றன. 1,600 வட்டார மொழி பேச்சு வழக்குகள் உள்ளன. 7 பெரிய மதங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இருக்கிறார்கள். இங்கே யாரும் எதிரிகள் கிடையாது.

    நம்மை சுற்றிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். இதற்கு அவநம்பிக்கை, அச்ச உணர்வு போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    பெண்களும், குழந்தைகளும் பாலியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களுக்கு ஆளாகும் போது இந்தியாவின் ஆன்மா மிகுந்த காயத்துக்கு உள்ளாகிறது. ஜனநாயக நாட்டில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததை விவாதப்பொருளாக்கியது அர்த்தமில்லாதது என்றார்.

    மேலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் அடிப்படை அடையாளம் என்றும், நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்றும், யாரையும் வேற்றுமையுடன் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    விழாவில் கலந்து கொண்டதற்காக பிரணாப் முகர்ஜிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.  #PranabMukherjee #RSS
    ×